ஸ்ரீநகர்: டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. நடப்பாண்டு ஜி20 அமைப்பை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜி- 20 மாநாட்டை முன்னிட்டு, வளர்ச்சியை நோக்கிய பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை, சுற்றுலா தொடர்பாக ஜி-20 ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தால் ஏரிக்கரையின் அருகே உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீநகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் நடப்பாண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் மற்றும் பொதுமக்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஜி-20 கூட்டம் நடைபெறும் பகுதி, லால் சவுக் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், மரைன் கமாண்டோ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தால் ஏரி, ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும், பாதுகாப்பு படை வீரர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதலே மூடப்பட்டு உள்ளன. வரும் புதன் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.