சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வேலை முடிந்துவிட்டு சாலையில் நடந்து வந்த இளைஞரிடம், 20 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் முகவரி கேட்பது போல் நடித்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு லேசான மயங்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட நபர், குற்றம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என தெரிகிறது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட இளைஞர், "நான் வேலை முடித்து வரும் போது ஒரு கார் நின்றது. காரில் இருந்த நான்கு பெண்களில் ஒருவர் சீட்டில் எழுதியிருந்த முகவரியைக் கேட்டார். நான் அதனை படிக்கும்போது, அவர்களில் ஒருவர், எனது கண்களில் எதையோ தெளித்தனர். அதன் பிறகு எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதன் பின் கண்களை திறக்கும் போது பெண்கள் என்னை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, போதைப்பொருள் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.