கலாபுரகி: கர்நாடகா மாநிலத்தில் கல்யாண கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நடத்துனர்களுக்கான ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இதற்கான உடற்தகுதி தேர்வு கலாபுரகி மாவட்டத்தில் இன்று(பிப்.10) நடைபெற்றது.
இதில் தேர்வர்களின் உயரம் மற்றும் எடையை அளவிடும்போது சிலரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது ஆடைகளை கழற்றி சோதித்ததில், அவர்கள் எடையை அதிகரித்துக் காட்டுவதற்காக கற்கள், இரும்பு போன்றவற்றை உடலில் வைத்துக் கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு பேருக்கும் தேர்வு எழுத அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "பிடிபட்ட நான்கு பேரும் உயரத்தில் தகுதி பெற்றிருந்தனர். ஆனால், எடை குறைவாக இருந்ததால், இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் தனது உள்ளாடைக்குள் சுமார் ஐந்து கிலோ எடை கொண்ட கற்களை கட்டி வைத்திருந்தார். மற்றொருவர் இரும்பு சங்கிலியை இடுப்பில் கட்டியிருந்தார்.
மற்றொருவர் இரும்பு பார்கள் பொருத்தப்பட்ட பிரத்யேகமான சட்டையை அணிந்திருந்தார். இன்னொருவர் தொடையில் இரும்பு ராடை கட்டியிருந்தார். இவர்கள் நான்கு பேருக்கும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்களுக்கு எதிராக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் நகைக்கடை ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்கம் கொள்ளை!