உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான கல்யாண் சிங் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவருகிறார்.
முன்னாள் ராஜஸ்தான் ஆளுநரான கல்யாண் சிங், லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஜூலை 4ஆம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
சில வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், மெல்ல உடல்நலம் தேறி குணமடைந்ததாக மருத்துவமனை கடந்த மாதம் இறுதியில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கல்யாண் சிங் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஆக.20) தெரிவித்துள்ளது. கல்யாண் சிங்கின் ரத்த அழுத்தம் மிகக் குறைந்து காணப்படுவதாகவும், அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்து முதல் முதலமைச்சராக இருந்தவர் கல்யாண் சிங். அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இவரது ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்காக பின்னாள்களில் இவர் ஆட்சியை இழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கோரா விபத்து - 13 பேர் மரணம்