டெல்லி:வசந்த் விகார் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம்(68) வசித்து வந்தார். இவரது வீட்டில் மஞ்சு என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 06) இவரது வீட்டில் துணி துவைக்கும் பணி செய்துவந்த ராஜூ (24) என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்த மஞ்சுவை தாக்கி, கை, கால்களை கட்டி தனி அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
கிட்டி குமாரமங்கலம் கொலை:
பின்னர், கிட்டி இருக்கும் அறைக்குச் சென்ற அந்த கும்பல், கிட்டியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். இதையடுத்து, வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த மஞ்சு கயிற்றை அவிழ்த்துகொண்டு தப்பிய நிலையில், இரவு 11 மணியளவில் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கிட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து மஞ்சுவிடம் விசாரணை நடத்தினர்.
காவல் துறை விசாரணை:
விசாரணையில் வீட்டிற்குள் நுழைந்த ராஜு, கிட்டியை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக ராஜூ இருக்கும் இடத்தை அறிந்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது!