தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!

முன்னாள் ஆளுநர் ரோசய்யா
முன்னாள் ஆளுநர் ரோசய்யா

By

Published : Dec 4, 2021, 9:08 AM IST

Updated : Dec 4, 2021, 11:45 AM IST

09:49 December 04

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 4) காலமானார்.

ஒய். ராஜசேகர் ரெட்டியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரோசய்யா காங்கிரசின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். முதலமைச்சராக இருந்த ஒய். ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பிறகு ஆந்திர மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சொந்தக் காரணங்களுக்காக 2010 நவம்பர் 24 அன்று பதவி விலகினார்.

இதையடுத்து, 2011 ஆகஸ்ட் 31ஆம் தேதிமுதல் 2016 ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் ஆளுநராகப் பதவி வகித்தார். இந்த நிலையில், ரோசய்யா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இவரது முழுப் பெயர் கோனிஜெட்டி ரோசய்யா, இவருக்கு வயது 88. இவர் குண்டூர் மாவட்டம் வெமுரு என்ற கிராமத்தில் 1933 ஜூலை 4 அன்று பிறந்தார். இவர் குண்டூர் இந்து கல்லூரியில் வணிகவியல் பயின்றார். 1989, 2004ஆம் ஆண்டுகளில் சிரலா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 16 முறை (இதில் 7 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல்) வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.

09:06 December 04

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ரோசய்யா

இவர் மாரீ சென்னா ரெட்டி, கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி, நெடுருமல்லி ஜனார்த்தன ரெட்டி, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது நிதியமைச்சராக இருந்தவர். இவரது அரசியல் வாழ்க்கை 60 ஆண்டுகள். இவரது மனைவி சிவலட்சுமி, மகன்கள் கே.எஸ். சுப்பா ராவ், கே.எஸ்.என். மூர்த்தி, மகள் பி. ரமா தேவி

அவர் வகித்த பதவிகள்:

  • 1968, 1974 , 1980 - ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினர்
  • 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர்
  • 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
  • 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டடத் துறை அமைச்சர்
  • 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்
  • 1982-1983 ஆந்திர மாநில உள் துறை அமைச்சர்
  • 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்த் துறை அமைச்சர்
  • 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம்,
  • மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்
  • 1995-1997 ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்
  • 1998 நரசரொபேட் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
  • 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத் துறை அமைச்சர்
  • 2009-2010 ஆந்திர மாநில முதலமைச்சர்
  • 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்
Last Updated : Dec 4, 2021, 11:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details