புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மத்திய அரசு தடுப்பூசி கொள்முதல் கொள்கையில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் தடுப்பூசி இல்லாமல் அவதிப்படுகின்ற நேரத்தில் பல நாடுகளுக்கு ஆறு கோடி தடுப்பூசிகளை மோடி அரசு அனுப்பியது.
இது நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும். தடுப்பூசி தயாரிக்கத் தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 21.31 கோடி பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால், 130 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதே நிலையில் சென்றால் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் ஆகும். அதற்குள் பல கோடி மக்கள் உயிரிழந்துவிடுவார்கள்.
புதுச்சேரியில் கரோனா தாக்கம் குறைந்துவிட்டது என்று மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
'புதுச்சேரியில் பதவியேற்க முடியாத பரிதாப நிலை... கேலிக்கூத்தாகிய ஜனநாயகம்' இப்போது மூன்றாவது அலை வரத் தயாராக உள்ளது. இதில் நான்கு வயது முதல் 17 வயது பிள்ளைகள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். நாம் அதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குழந்தைகளைத் தாக்கினால் அவர்கள் விரைவில் உயிரிழந்துவிடுவார்கள். எனவே குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும்.
குறிப்பாக புதுச்சேரியில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைக்க வேண்டும். 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் எளிதான விஷயம்.
புதுச்சேரியை கரோனா இல்லாத மாநிலமாக மாற்றுவதற்குத் தேவைப்படுகின்ற தடுப்பூசிகளைத் தர வேண்டும் எனப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த கரோனா நிவாரணம் மூன்றாயிரம் ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை அமைக்க முடியவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களது அரசியல் கட்சி விவகாரம். அதைப் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவியேற்க முடியாத ஒரு பரிதாப நிலையை பாஜக-என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியில் ஏற்படுத்தியுள்ளது என்பது வேதனையைத் தருகிறது. ஜனநாயகத்தை இவர்கள் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்