தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

By

Published : Jul 18, 2023, 6:28 AM IST

Updated : Jul 18, 2023, 7:59 AM IST

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று (ஜூலை 18) அதிகாலை 4.25 மணியளவில் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னதாக சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் பெங்களூருவில் சிகிச்சையைத் தொடர்ந்து வந்தார். தனது தந்தை காலமாகி விட்டார் என்று உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். உம்மன் சாண்டியின் மனைவி மரியம்மா. இவருக்கு மரியா உம்மன், சாண்டி உம்மன் மற்றும் அச்சு உம்மன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உம்மன் சாண்டி, தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். 1970ஆம் ஆண்டில் சாண்டி, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் முதன் முதலாக புதுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977ஆம் ஆண்டில் கருணாகரன் அமைச்சரவையில் முதல் முறையாக சாண்டி அமைச்சராக பொறுப்பேற்றார். இரண்டு முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்து உள்ள உம்மன் சாண்டி, நிதி அமைச்சராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.

அவர் முதலமைச்சராக இருந்தபோது மக்களின் குறைகளைக் கேட்பதற்காக தொடங்கப்பட்ட "ஜனசம்பர்க பரிபடி" திட்டம் மிகவும் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் : கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது இரங்கல் பதிவில், "உம்மன் சாண்டி திறமையான நிர்வாகி மற்றும் மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவர். சாண்டியும், நானும் ஒரே ஆண்டில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர்கள்.

"அதே ஆண்டில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதே கட்டத்தில்தான் மாணவர் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தோம். அதே நேரத்தில் நாங்கள் பொது வாழ்க்கையை நடத்தினோம். அவரிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினம்" என குறிப்பிட்டு உள்ளார்.

சுதாகரன் இரங்கல்: கேரள முன்னாள் முதலமைச்சரின் மறைவுக்கு கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். "அன்பின் சக்தியால் உலகையே வென்று சாதித்த மன்னனின் கதை அதன் முடிவைக் காண்கிறது. இன்று, உம்மன் சாண்டி என்ற ஒரு ஜாம்பவானை இழந்ததில், நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையை அவர் மாற்றினார். அவரது மரபு என்றென்றும் நம் உள்ளத்தில் எதிரொலிக்கும்" என்று சுதாகரன் ட்வீட் செய்து உள்ளார்.

இதையும் படிங்க: Minister Ponmudi:13 மணி நேர சோதனைக்குப்பின் அமைச்சர் பொன்முடியை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை

Last Updated : Jul 18, 2023, 7:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details