ஜார்க்கண்ட்:மத்தியப்பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் கடந்த மாதம் பழங்குடியினத் தொழிலாளர் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியினத் தொழிலாளியிடம் மன்னிப்புக் கேட்டார். அவருக்கு நிதியுதவியும் வழங்கினார்.
மேலும், தொழிலாளரை அவமதித்த பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் ஒருவர் ஒரு இளைஞரை அவமதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜார்முன்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், பாஜகவின் மூத்த தலைவருமான தேவேந்திர குன்வார், பொது இடத்தில் ஒரு இளைஞரை அவமதித்துள்ளார். தேவேந்திர குன்வார், பொதுவெளியில் மக்கள் கூடியுள்ள இடத்தில், ஒரு இளைஞரை தோப்புக்கரணம் போட வைத்தும், காலால் எட்டி உதைத்தும் அவமரியாதை செய்துள்ளார். மேலும், உச்சகட்டமாக தரையில் எச்சில் துப்பி, அதனை உட்கொள்ளும்படி செய்துள்ளார். அந்த இளைஞர் அழுதபடியே தேவேந்திர குன்வார் கூறியதைச் செய்துள்ளார். இந்த மோசமான செயலை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், வீடியோவாக எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.