பெங்களூரு :முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. கஸ்துரிரங்கனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இலங்கை சென்று உள்ள அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரை பெங்களூரு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் கஸ்தூரிரங்கன், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றினார்.
இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ பி.எஸ்.எல்.வி உள்ளிட்ட பல்வேறு ராக்கெடுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்றது முதல் பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் முக்கிய பொறுப்பு வகித்தார். தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராகவும் இருந்தார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கர்நாடக அறிவுசார் ஆணையத்தின் தலைவர், 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் 2009ஆம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் இயக்குநராகவும், முன்னாள் மத்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கஸ்துரிரங்கன்.