டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் 2ஆவது நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது, பிரதமர் மோடி, பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்பட சர்ச்சையை மேற்கோள்காட்டி, நாட்டில் திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு கட்சியின் தலைவர்களும், பிரமுகர்களுக்கும் அறிவுறுத்தினார்.
வரும் ஜனவரி 25ஆம் தேதி பதான் திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக, டிசம்பரில் இந்த படத்தின் பேஷாராம் ரங் என்னும் பாடல் வெளியிடப்பட்டது. இதில் நடிகை தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில் படுகவர்ச்சியுடன் தோன்றினார்.