தார்வாட்:2023-24ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று(பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை அணிந்திருந்தார்.
புகழ்பெற்ற இல்கல் சேலைகள் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இல்கல் நகரில் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. கர்நாடகாவில் இல்கல் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
அதேபோல் நிதியமைச்சரின் இல்கல் புடவையில் புகழ்பெற்ற பாரம்பரிய தார்வாட் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. தார்வாட் நகரின் நாராயண்பூரில் 32 ஆண்டுகளாக எம்பிராய்டரி துறையில் ஈடுபட்டு வரும் ஆர்த்தி கிராஃப்ட்ஸ் என்ற சுயதொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பெண்களால் பிரத்யேகமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக எம்பியும், மத்திய அமைச்சருமான பிரலாத் ஜோஷி இந்த புடவையின் பாரம்பரியம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்து, இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசளித்தார்.