போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக 'ஆப்ரேஷன் கங்கா' என மீட்பு திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சர் வி கே சிங் போலந்திற்கும், அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ரோமானியாவுக்கும், கிரண் ரிஜ்ஜு ஸ்லோவாக்கியாவுக்கும், ஹர்தீப் பூரி ஹங்கேரிக்கும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ரோமானியா தலைநகர் பூச்சராஸ்டிலிருந்து 183 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மும்பை வந்தடைந்தது. விமானம் மூலம் நாடு திரும்பியவர்களை ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹிப் பாட்டில் வரவேற்றார். பூச்சராஸ்ட் நகரில் இருந்து இந்தியா வந்தடையும் மூன்றாவது மீட்பு விமானம் இது.
மீட்பு பணி தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,நேற்று ஒரே நாளில் ஒன்பது விமானம் ஹங்கேரி, ரோமானியா, ஸ்லோவாக்கியா, போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்தது. ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 17,000 இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் இதுவரை சுமார் ஐந்தாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தக்குதல் மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி முதல் இந்தியர்களை மீட்கும் பணியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. போரை நிறுத்த இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதித்துவருகின்றன.
இதையும் படிங்க:உத்தரப் பிரதேச தேர்தல்: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்