திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் சாத்தன்பாறை பகுதியைச் சேர்ந்த மணிக்குட்டன் என்பவர், தனது வீட்டின் அருகே ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அண்மையில் சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மணிக்குட்டனின் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுகாதார காரணங்களுக்காக ஹோட்டலை தற்காலிகமாக மூடியதாக தெரிகிறது.
இதனால் மணிக்குட்டன் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனிடையே ஹோட்டலை திறப்பதற்கான ஏற்பாடுகளையயும் செய்துள்ளார். இந்நிலையில், ஹோட்டல் ஊழியர் மணிக்குட்டனை சந்திக்க வந்தபோது, அவரது வீடு நீண்ட நேரமாக உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மணிக்குட்டன் அறை ஒன்றில் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் மனைவியின் தாயாரும் கீழே சடலமாக கிடந்துள்ளனர்.