மும்பை:நேட்டோவுடன் இணைவதைக் கைவிடுமாறு ரஷ்யா எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், இதனை உக்ரைன் ஏற்க மறுத்தது. இதையடுத்து, உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து முன்னேறிவரும் ரஷ்யா பலமுனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ளது. ஓரிரு நாளில் அந்நகரைக் கைப்பற்றும் என அமெரிக்கா கணித்துள்ளது. இச்சூழலில் எப்போது மரணம் சம்பவிக்குமோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் இருந்துவருகின்றனர்.
லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள், குழந்தைகள் என பதுங்குக் குழிகள், சுரங்கங்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். இணைய வசதி, மின் இணைப்பு ஆகியவை பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள இந்தியர்கள் பலர் அண்டை நாடு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் பலர் உக்ரைனிலேயே சிக்கிக் கொண்டனர். போரை நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் கோரிக்கைவிடுத்துள்ளன. இருப்பினும் எவற்றிற்கும் மயங்காத ரஷ்யா தனது நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறிய முதல் விமானம் 219 பயணிகளுடன் இன்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானம் மதியம் ரோமானியா தலைநகர் புக்காரெஸ்ட்டிலிருந்து கிளம்பியது. தாயகம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வரவேற்றார்.