போபால்(மத்தியப்பிரதேசம்): மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அரசு கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனையில் நேற்றிரவு (நவ. 9) தீ விபத்து ஏற்பட்டது.
இதில் குழந்தைகள் வார்டில் இருந்த நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது மேலும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எட்டாக உயர்ந்துள்ளது.
உயர்மட்ட விசாரணை
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரம் மற்றும் மருத்துவக்கல்வி கூடுதல் தலைமைச் செயலர் முகமது சுலைமான் விசாரணை மேற்கொள்வார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், சம்பவ இடத்தில் மருத்துவக்கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சாராங் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர், "தீ விபத்தின்போது, பிறந்த குழந்தைகள் வார்டில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்தனர்.
அதில், 36 குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளனர். மேலும், உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்தினருக்கு ரூ. நான்கு லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மின் கோளாறு
ஃபதேகர் தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் சுபைர் கான் கூறுகையில், "மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் நேற்று இரவு 9 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட மின் கோளாறினால்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தைகளைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக மருத்துவமனைப் பணியாளர்கள் தப்பி ஓடிவிட்டனர் என பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இதுபோன்று, நவ. 6ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில், 11 நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை - மாநகராட்சி நிர்வாகம் கெடுபிடி