தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Train fire accidents in India: இந்தியாவில் நடந்த ரயில் தீ விபத்துகள்... 1985 முதல் 2023 வரை...!

மதுரையில் சுற்றுலா ரயில் தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் நடந்தது முதல் கடந்த சில தசாப்தங்களில் நடந்த ரயில் தீ விபத்துகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

ரயில் தீ விபத்துகள்
Train fire accidents in India

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 6:40 PM IST

ஹைதராபாத்:மதுரையில் இன்று(ஆகஸ்ட் 26) சுற்றுலா ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதில், லக்னோவிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்த பத்து பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் காயமடைந்தனர். ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டரைப் பயன்படுத்தி சமைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த ரயில் தீ விபத்து சம்பவங்களின் விபரங்களைப் பார்க்கலாம்...

19.08.2023: கடந்த 19ஆம் தேதி பெங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் இறங்கிச் சென்ற பிறகே தீ விபத்து ஏற்பட்டதால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

07.07.2023:கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி, ஹவுராவிலிருந்து செகந்திராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. தெலங்கானாவில் உள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைபள்ளி இடையே இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகள் முன்கூட்டியே ரயிலில் இருந்து இறங்கியதால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

22.06.2023: சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் எஸ்பிரஸ் ரயில், வியாசர்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இதில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

14.06.2023:டெல்லி ஆனந்த் விஹாரில் இருந்து பீகாரின் ஜெய்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் டல்சிங் சாராய் ரயில் நிலையம் மற்றும் நசிர்கஞ்ச் ரயில் நிலையம் இடையே இந்த விபத்து நடந்தது. ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

08.06.2023: ஒடிஷா மாநிலத்தில் நுபாடா மாவட்டத்தில் துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. உராய்வு பிரேக் பேட்களில் (brake pads) தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை.

01.06.2023: கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு ரயில் பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமானது. உயிரிழப்பு ஏதுமில்லை.

05.03.2022:உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரிலிருந்து டெல்லி சென்ற பயணிகள் ரயில் மீரட் மாவட்டத்தில் தௌராலா ரயில் நிலையம் அருகே தீப்பற்றியது. இதில் இரண்டு ரயில் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

29.08.2019: ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற தெலங்கானா எக்ஸ்பிரஸ், ஹரியானா மாநிலத்தின் அசோதி ரயில் நிலையம் அருகே தீவிபத்துக்குள்ளானது. இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. பின்னர் இரு பெட்டிகளும் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

28.12.2013:ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தி அருகே சென்று கொண்டிருந்த பெங்களூரு - நண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏசி ரயில் பெட்டிகளில் தீப்பற்றியது. இந்த கோர விபத்தில், 12 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

30.11.2012:சென்னையிலிருந்து டெல்லி சென்ற ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் சிதாவுலி ரயில் நிலையம் அருகே சென்றபோது தீ விபத்துக்குள்ளானது. குறிப்பாக இரண்டு ஏசி பெட்டிகளில் தீப்பற்றியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ரயிலில் இருந்து அப்புறப்படுத்தினர். தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், விபத்து ஏற்பட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு 55 வயதான ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

30.7.2012:டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சென்றபோது தீவிபத்துக்குள்ளானது. இதில், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.

22.5.2012:ஹூப்ளி நகரிலிருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ஹம்பி விரைவு ரயில், ஆந்திரா அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, நான்கு பெட்டிகள் தடம் புரண்டதில் ஒரு ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்தது. இதில், சுமார் 25 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர்.

22.11.2011: ஹவுரா - டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்க்கண்ட் அருகே சென்றபோது, இரண்டு ஏசி ரயில் பெட்டிகளில் தீப்பற்றியது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

August 2008:செகந்திராபாத்திலிருந்து காக்கிநாடா சென்ற கெளதமி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

15.05.2003:பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே ஃபிராண்டியர் மெயிலில் தீப்பிடித்ததில் சுமார் 38 பேர் உயிரிழந்தனர்.

26.10.1994: ஜார்க்கண்ட் மாநிலத்தில் லோடாபஹர் மற்றும் சக்ரதர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, மும்பை - ஹவுரா மெயில் தீப்பிடித்து எரிந்தது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

06.06.1990:ஆந்திர மாநிலம் கொல்லகுடா அருகே ஏற்பட்ட ரயில் தீவிபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

16.04.1990:பீகாரில் தலைநகர் பாட்னா அருகே ஏற்பட்ட ரயில் தீ விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.

16.04.1988: பாட்னா அருகே ஏற்பட்ட ரயில் தீ விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர்.

10.10.1988: ஆந்திர மாநிலம் சேரலப்பள்ளி அருகே பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

23.02.1985: மத்திய பிரதேச மாநிலம் ராஜ்நந்த்கானில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: Madurai Train Fire: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details