பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்வில் பங்கேற்ற கங்கனா, "இந்தியாவுக்கு 2014ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது. அதற்கு முன்பு கிடைத்தது சுதந்திரம் இல்லை பிச்சைதான்" எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. கங்கனாவின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலதரப்பட்டோர் எதிரான கண்டனத்தைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுவருகின்றனர்.
கங்கிரஸ் மூத்தத் தலைவர் அனந்த் சர்மா, "கங்கனாவின் கருத்து வெட்கக்கேடானது, அதிர்ச்சியளிக்கிறது. அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்பாய் படேல் ஆகியோரை அவமதித்துள்ளார். பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போரட்ட வீரர்களின் தியாகங்களை இழிவுப்படுத்தியுள்ளார்.
கங்கனாவிற்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் நாட்டையும் அதன் நாயகர்களையும் அவமதிக்காமல் இருக்க மனநல மதிப்பீடு செய்யப்பட வேண்டும்" எனப் பதிவிட்டார்.