டெல்லி:இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 9ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு நாட்டு மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த நிலையில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு வரவழைக்கப்படுகின்றனர். முன்னதாக நான்கு கட்டங்களாக இந்திய பயணிகளை இஸ்ரேலில் இருந்து மீட்ட நிலையில், இன்று ஐந்தாவது கட்டமாக இந்தியர்கள் தாயகம் வந்தடைந்துள்ளனர்.
இஸ்ரேலில் சுமாா் 18 ஆயிரம் இந்தியா்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. முன்னதாக, ஏர் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து 212 இந்தியா்கள் அக்டோபர் 13ஆம் தேதி காலை இந்தியா வந்தடைந்தனர்.
தொடர்ந்து, இரண்டாவது விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 235 இந்தியா்களும், மூன்றாம் மற்றும் நான்காவது விமானங்கள் மூலம் இஸ்ரேலிருந்து மொத்தம் 500க்கும் மேற்பட்ட இந்தியர்களை தலைநகரான டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று (அக்.17) இரவு இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 286 இந்தியப் பயணிகளுடன் 18 நேபாள நாட்டு மக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது.