லுசைல்: ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. லீக், கால்இறுதி, மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சியான இறுதிப் போட்டிக்கு முன்னாள் சாம்பியன்கள் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றன.
லுசைல் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜென்டினா அணியில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.
ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்பை பிரான்ஸ் வீரர்கள் வீணடித்தனர். அதேநேரம் கைமேல் கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அர்ஜென்டினா வீரர்கள் கோலாக மாற்றினர். ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி அருமையாக பயன்படுத்தி, அசத்தல் கோலாக திருப்பி அணியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.
நடப்பு கத்தார் உலக கோப்பை தொடரில் மெஸ்சி அடித்த 12-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மற்றொரு வீரர், ஏஞ்செல் டி மரியா கோல் அடித்து அணியின் கணக்கை 2-க்கு 0 என்று மாற்றினர்.
அர்ஜென்டினா வீரர்களின் அசத்தலான தடுப்பு ஆட்டத்தால் முதல் பாதியில் பிரான்ஸ் வீரர்களால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முதல் பாதியின் கூடுதல் நேரத்திலும் பிரான்ஸ் வீரர்கள் எடுத்த முயற்சிகள் வீணாகின.