போபால்:மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாநில செயலகத்தில் பொது நிர்வாகத் துறையில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களவையில் நேற்று (10.08.2023) ராகுல் காந்தி பாஜக பெண் எம்.பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததாக வெளியான சர்ச்சை விவகாரம் குறித்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் (ஜரா சோச்சியே மணிப்பூர் கி மஹிலான் கோ கைசா மஹ்சூஸ் ஹுவா ஹோகா : ज़रा सोचिए मणिपुर की महिलाओं को कैसा महसूस हुआ होगा?) மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என பாஜக பெண் எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதனுடன் பாஜக பெண் எம்.பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் கையெழுத்திட்டு வழங்கிய புகார் கடிதத்தையும் இணைத்துள்ளார்.
மக்களவையில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் நேற்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது. இதில் மத்திய பாஜக அரசாங்கத்திற்கு எதிராக ராகுல் காந்தி பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். அதிலும் குறிப்பாக மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் மக்களைக் கலவரத்தில் ஈடுபட விட்டுவேடிக்கை பார்த்ததாகவும், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாரபட்சம் இன்றி பாஜகவின் மறைமுக அரசியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்திலும் அவர் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று கூட நாட்டிற்குத் தெரியாத வகையில் அங்கு வன்முறை கண்மூடித்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, இதன் மூலம் பாரதத் தாயை பாஜகவினர் கொலை செய்து விட்டார்கள் எனவும் விமர்சித்தார். ராகுல் காந்தியின் பேச்சு நாட்டின் எதிர்க்கட்சி என்ற இடத்தில் இருந்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நிலையில், அவர் பேசும் நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அவைக்கு வராமல் போனது மக்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழச்செய்துள்ளது.
மேலும் மணிப்பூர் விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் கேள்விக்குப் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்பது மட்டுமே எதிர்க்கட்சியாகக் காங்கிரஸின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதனை மையப்படுத்தித்தான் மக்களவையில் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் முன்வைத்தார். ஆனால் அவரை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி மிக மோசமான பேச்சை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார் எனக்கூறி அதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
அதை பாஜக எம்.பிக்களும், அமைச்சர்களும் ஆதரித்து மேசைகளில் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். இப்படி காரசார விவாதங்கள் முடிந்தது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை கூட்டத்தின் முடிவுக்கு பிறகுதான் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் இடையேயான அரசியல் விளையாட்டு ஆரம்பம் ஆனது. அவையில் வைத்து தங்களுக்கு ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பாஜக பெண் எம்.பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் மனு அளித்தனர்.
அத்தனை நேரம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சேனல்களிலும் மக்களவை விவாதம் குறித்த நேரலை ஒளிபரப்பப்பட்ட நிலையில், அடுத்த நொடியே ராகுல் காந்தியின் பறக்கும் முத்தம் தொடர்பான செய்திகள் சேனல்களில் ஒளிபரப்பாகின. ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளப்பக்கத்திலும் இந்த செய்தி ட்ரெண்ட் ஆனது. பறக்கும் முத்தம் தொடர்பான செய்தி மணிப்பூர் விவகாரத்தை பின்னுக்குத் தள்ளிய நிலையில், அந்த விவகாரத்தை வைத்தே தற்போது பாஜக பெண் எம்.பிக்களை நோக்கி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷைல்பாலா மார்ட்டின் பாஜக பெண் எம்.பிக்களை நோக்கி, பறக்கும் முத்தத்திற்கே இந்த நிலை என்றால், மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என நினைத்துப் பாருங்கள் என்ற வகையில் கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அவருக்கு சல்யூட் அடிக்கும் வகையிலான இ.மோஜிகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலர், நாட்டில் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் அரசாங்கத்தை நோக்கி இப்படி தைரியமாகக் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Rahul Gandhi Flying Kiss: திசை திருப்ப முயல்கிறதா பாஜக? இணைய வாசிகளின் கருத்து என்ன?