தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வினாத்தாள் லீக் விவகாரம்: தெலங்கானா பாஜக மாநிலத்தலைவர் பண்டி சஞ்சய் அதிரடி கைது! - பாஜக பிஆர்எஸ் இடையே வலுக்கும் மோதல்

தெலங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான பண்டி சஞ்சய் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது சட்டவிரோத கைது என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Bandi Sanjay arrest
பண்டி சஞ்சய் கைது

By

Published : Apr 5, 2023, 9:06 PM IST

பண்டி சஞ்சய் கைது

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்ரல் 4) வாரங்கல்லில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து, வாட்ஸ்அப் மூலம் இந்தி வினாத்தாள் வெளியானது. இதுதொடர்பான வழக்கில் தான், பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த், 10ஆம் வகுப்பு இந்தி வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். மேலும் இருவரும் இதுதொடர்பாக சாட்டிங் செய்துள்ளனர். அதில் ஒருசில மெசேஜ்கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்றிரவு கரீம் நகரில் உள்ள பண்டி சஞ்சயின் குமாரின் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன் பாஜக தொண்டர்கள் குவிந்து, காவல் துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பண்டி சஞ்சய் முதலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும், அதன்பிறகு கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பிஆர்எஸ்(BRS - பாரத ராஷ்டிரிய சமிதி) தலைமையிலான அரசு இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், பழிவாங்கும் நடவடிக்கையாக பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலத்துக்கு வரும் நிலையில், பாஜக எம்.பி. கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, கடந்த மாதம் 20ம் தேதி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்கு பழிவாங்கும் நோக்கில், பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டிருப்பதாக பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக வாரங்கல் காவல்துறை ஆணையர் ரங்கநாத் கூறுகையில், "வினாத்தாள் பாஜக நிர்வாகிகள் பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வாட்ஸ்அப் சாட்டிங் அடிப்படையில் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனை எங்களிடம் தர மறுக்கிறார். இந்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன்.. முதலமைச்சரை மாமா என்றே அழைப்பேன்.. நடிகர் சுதீப் அதிரடி..

ABOUT THE AUTHOR

...view details