ஹைதராபாத்: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தந்தையர் தினத்தன்று குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு, "தங்களை பாதுகாத்ததற்காக, எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக, வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொண்டு குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக தியாகங்களைச் செய்ததற்காக" என்று தந்தையின் பல்வேறு செயல்களுக்காக நன்றி தெரிவிக்கின்றனர்.
1909ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் 1910ஆம் ஆண்டில் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இருப்பினும், இந்த நாள் கொண்டாட்டத்தின் துல்லியமான தேதி குறித்து பல நிபுணர்கள் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்.
இந்த நாள் சோனோரா ஸ்மார்ட் டாட் (Sonora Smart Dodd) என்பவரால் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, சோனோராவின் தாயார் அவர் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டார். அதன் பின்னர் அவரது தந்தை, மூத்த கேப்டனான (Civil War Veteran Captain) வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் (William Jackson Smart), என்பவர் அவரை வளர்த்தார்.
வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மனைவி இறந்த பிறகு, அவரது ஆறு குழந்தைகளையும் நன்கு கவனித்து வளர்த்தார். வில்லியம் ஜாக்சனின் பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதியில் தனது தந்தையின் போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் ஜூன் 5, 1909அன்று, தந்தையர் தினத்தை சோனோரா ஸ்மார்ட் டாட் கொண்டாடினார்.