லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பகதூர் சிங், கடந்த 10ஆம் தேதி தனது நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தபோது, நிலத்திலிருந்து பழங்கால செப்பு பொருள்கள் கிடைத்தன. சுமார் 77 ஆயுதங்கள், கலைப்பொருட்கள் கிடைத்தன. அவற்றை பகதூர் சிங் தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தொல்லியல்துறை மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, பழங்கால பொருட்களை கைப்பற்றினர். பின்னர் அவற்றை அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தினர். கார்பன் சோதனையில், அவை கி.மு. 1,800 முதல் கி.மு. 1,500 வரையிலான செப்பு காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
77 பொருட்களில், பல்வேறு அளவுகளில் வாள்கள், ஈட்டிகள், மண்பாண்டங்கள், மனித உருவங்கள் உள்ளிட்டவை இருந்ததாகவும், கேரிக் மட்பாண்ட கலாச்சாரம் இப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பின்பற்றப்பட்டது என்றும் தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர். இவை செப்புக்காலத்தைச் சேர்ந்தவை என்றும், ரிஷி மாயன், ரிஷி சியவான், ரிஷி மார்கண்டேயர் மற்றும் பல முனிவர்களின் பிரபலமான தியான தலமாக மெயின்புரி இருந்தது என்றும், 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கலைப்பொருட்கள் மெயின்புரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, முறையாக சோதனை செய்யப்பட்டு உரிய ஆவணங்களுடன் பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆன் பிராங்க்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டைரி குறிப்பை எழுதிய சிறுமி - டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது கூகுல்