பெங்களூரு: போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமாகி வருகிறது. இந்நிலையில், தேர்வே எழுதாமல் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பலர் பெற்று வரும் மோசடி வியாபாரங்கள் பெங்களூருவில் நடந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஓர் தனியார் கல்வி நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் மூலம் அங்கு பல்வேறு போலி மதிப்பெண் சான்றிதழ்கள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுவது தெரியவந்தது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட அந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி வேலையை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வலைதளம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்ட கிஷோர், சாரதா, ஷில்பா, ரஜன்னா ஆகியோருடன் 1,000 போலி மதிப்பெண் சான்றிதழ்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதில், கர்நாடகா திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 பிரபலமான பல்கலைக்கழகத்தின் சீல்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.