பெங்களூரு:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி சென்னை - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில், போலி டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐபிஎல் தொடருக்கான தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான தற்காலிக ஊழியராக தர்ஷன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு பார்-கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஏப்ரல் 17ம் தேதி சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டிக்கு டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.
இந்நிலையில் தனது அடையாள அட்டையில் இருந்த பார்-கோடை நீக்கிய தர்ஷன், போலியான பார் கோடை உருவாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் போலி டிக்கெட்களை உருவாக்கிய அவர், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதை விற்றுள்ளார். போட்டி நடைபெற்ற தினத்தன்று ரசிகர்கள் கொண்டு வந்த டிக்கெட்டை பரிசோதித்த போது, அவை போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.