மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி செய்துவருகிறது. கடும் அரசியல் நெருக்கடியைக் கடந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் ஒருங்கிணைப்பில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டணி அரசு தன்னுடைய முதலாம் ஆண்டை இன்று (நவ. 28) நிறைவுசெய்கிறது.
இது தொடர்பாக இன்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், “கோவிட்-19 பெருந்தொற்றுநோயைக் கையாளுவதில் இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு தோல்வியை அடைந்துள்ளது. நல்ல வேளையாக, கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையால் மகாராஷ்டிரா பாதிக்கப்படவில்லை.
ஆளும் கூட்டணியின் தலைவர்கள் வெட்கமின்றி அப்பாவி மக்களிடம் தாங்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தியதாகக் கூறுகின்றனர். கோவிட்-19 காரணமாக நாட்டில் நடந்த இறப்புகளில், 47 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 பரவலை, அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் தரவுகளை மறைக்கப் போராடுகிறார்கள்.
மாநிலத்தில் கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவக் கருவிகள் கொள்முதலில் தாக்கரே அரசு மிகப்பெரும் ஊழலை புரிந்துள்ளது. அவை அனைத்தையும் நாங்கள் விரைவில் அம்பலப்படுத்துவோம். தொற்றுநோய் தீவிரமடைந்தபோது, இது குறித்து முதலமைச்சருக்கு நான் பல கடிதங்களை எழுதி அனுப்பியிருந்தேன். அவர் எதற்கும் பதிலளிக்கவில்லை. எனது பரிந்துரைகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை.