டெல்லி: வலதுசாரிகளின் வெறுப்பு பரப்புரைக்கு ஆதரவாக இருந்ததாக ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக்கொள்கை இயக்குநராக இருந்த அங்கீதா தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த ஃபேஸ்புக் நிறுவனம் ஆயத்தமானபோது, அங்கீதா தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தப் பதவியில், தற்போது, முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபேஸ்புக்கின் பயனர்களின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை, இணைய நிர்வாகம் உள்ளிட்டவற்றின் கொள்கையை மேம்படுத்தும் வகையில் ராஜிவ் அகர்வால் செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
26 ஆண்டு காலம் ஐஏஎஸ் அலுவலராகப் பணியாற்றிய அவர், ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்ட, அறிவுசார் சொத்துடைமை குறித்த தேசிய கொள்கைக் குழுவின் செயலராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.