டெல்லி:லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லட் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் இறக்குமதிக்கு, தேவையான உரிமத்தை பெற, போதுமான அவகாசம் வழங்குவது குறித்து, மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக, தகவல் வெளியான நிலையில், இந்த உரிமம் இன்றி, மின்னணு பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு ஒத்திவைத்து உள்ளது.
இந்த நிறுவனங்கள், நவம்பர் மாதம் 1ஆம் தேதிக்குள், இறக்குமதி உரிமத்தை, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் இறக்குமதிக்கு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்து இருந்தது.
மேலும், இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதி நிறுவனங்கள், இறக்குமதி உரிமம் பெற வேண்டும் என் அறிவுறுத்தி இருந்தது. மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மின்னணுப் பொருட்கள் இறக்குமதி துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் எதிரொலியாக, ஆப்பிள், சாம்சங், எச்.பி., உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், தங்கள் லேப்டாப், டேப்லெட், கமப்ய்யூட்டர் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்குவது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியான. இந்நிலையில், மின்னணு பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை , அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு ஒத்திவைத்து உள்ளது.
மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT), ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், ஆகஸ்ட் 3ஆம் தேதியிட்ட தடை உத்தரவு, நடப்பு ஆண்டு நவம்பர் மாதம 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்து உள்ளது. பெரும்பான்மையான மின்னணுப் பொருட்கள் சீனா, கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கும் நோக்கிலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ட்விட்டர் சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "இது நடைமுறைக்கு வருவதற்கு காலம் உள்ளது, அது விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
மின்னணுப் பொருட்கள் இறக்குமதியில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள், இதற்கான உரிமத்தை முறையாகப் பெற்று இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, தடை உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் வன்பொருள் திட்டத்தின் (PLI 2.0) கீழ், 44 நிறுவனங்கள், இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் கடைசி நாளில் மேலும் இரண்டு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பத்தை, இந்த திட்டத்தின் வலைதள பக்கத்தில் தாக்கல் செய்துள்ளன. நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மின்னணுப் பொருட்கள் இறக்குமதியில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள், இதற்கான உரிமத்தை பெறும் பொருட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க DGFT ஒரு போர்ட்டலை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!