ஹைதராபாத்:சனிக்கிழமை மாலையுடன் பிகார் சட்டப்பேரவை தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி முந்துவது தெரியவருகிறது. ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மையை அவர்கள் நெருங்கியுள்ளனர்.
எனினும் பெரும்பாலான நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அல்லது இழுபறி என்றே முன்னறிவித்துள்ளன.
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களையும், ஆர்ஜேடி, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி 120 இடங்களை பிடிக்கும். சிராக் பஸ்வானின் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) ஒரு இடத்திலும், இதர கட்சிகள் ஆறு இடங்களிலும் வெற்றி பெறும்.
ரி பப்ளிக் - ஜன் கி பாத்
ரி பப்ளிக் ஜன் கி பாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை விட தேஜஸ்வி யாதவ்வின் மகா கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி 118-138 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 91-117 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஜூனியர் பஸ்வானின் எல்ஜேபி 5 முதல் 8 இடங்களிலும், இதர கட்சிகள் 3 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
ஏபிபி - சி வோட்டர்
ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பில் மகா கூட்டணிக்கு 108-131 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 104-128 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. சிராக் பஸ்வான் கட்சி 1-3 தொகுதிகளிலும், இதர கட்சிகளுக்கு 4-8 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
டிவி9
டிவி9 கருத்துக் கணிப்பிலும் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகா கூட்டணிக்கு 115-125 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 110-120 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிராக் பஸ்வான் 10-15 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 10-15 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிகார் சட்டப்பேரவை தேர்தல்; திரண்டு வந்து வாக்களித்த பெண்கள்! ஆதரவு யாருக்கு?