ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, தியாகிகள் தினத்தையொட்டி ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தியாகிகள் கல்லறைக்குச் தான் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகம் தன்னை, வீட்டுக் காவலில் சிறை வைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
"இன்று தியாகியின் கல்லறைக்குச் செல்ல விரும்பியதற்காக நான் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டு உள்ளேன். இந்த நேரத்தில் இந்திய அரசாங்கம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ சட்டவிரோதமாக ரத்து செய்த துரோகச் செயலை நியாயப்படுத்த, உச்ச நீதிமன்றத்தில், இயல்பு நிலை தொடர்பான தனது உயர்ந்த கூற்றுகளைப் பயன்படுத்தி உள்ளது.
வீர் சர்வர்க்கர், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, கோவால்கர் மற்றும் கோட்சே போன்ற பாஜகவினரின், வெறுப்பையும் பிரிவினையையும் பரப்பும் எண்ணங்களை எங்கள் மீது திணிக்க முடியாது. எங்களுடைய வரலாற்றை சிதைக்கவோ அல்லது எங்கள் மாவீரர்களை மறக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த தியாகிகள் தினத்தில், சர்வாதிகாரிகளுக்கு எதிராக இறுதிவரை வீரத்துடன் போராடிய தியாகிகளின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்." என மெகபூபா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.