சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி மருத்துவரான பத்மராஜனை, டாக்டர் என அழைத்தால் யாருக்கும் இவரை தெரியாது. அதற்கு பதிலாக தேர்தல் மன்னன் பத்மராஜன் என அழைத்தால் இவரை தெரியாத ஆளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு பத்மராஜன் போட்டியிடாத தேர்தல்களே இல்லை.
உள்ளூரை நிர்வகிக்கும் ஊராட்சி தேர்தலில் இருந்து நாட்டை நிர்வகிக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் என பத்மராஜன் போட்டியிடாத தேர்தல்களே இல்லை. இதுவரை பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முதல் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை என 232 தேர்தல்களில் போட்டியிட்டு பத்மராஜன் படுதோல்வி அடைந்து உள்ளார்.
முயற்சி திருவினையாக்கும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப பத்மராஜன் தொடர்ந்து போராடி வருகிறார். பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து வரும் தேர்தல் மன்னன் பத்மராஜன் 233-வது முறையாக கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளார்.
தேர்தல் மன்னன் பத்மராஜன் யாரை எதிர்த்து போட்டியிட உள்ளார் என்ற தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிக்காவி தொகுதியில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து பத்மராஜன் வேட்புமனுத்தாக்கல் செய்து உள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பத்மராஜன்.
தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தனது கால் தடத்தை பத்மராஜன் பதித்து உள்ளார். முக்கிய தலைவர்களான நரசிம்மராவ், வாஜ்பாய், எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, எடியூரப்பா, ஏ.கே. ஆண்டனி, சதானந்த கெளடா, பினராயி விஜயன், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்தது பத்மராஜன் களம் கண்டு உள்ளார்.
தேசிய தலைவர்களுக்கு டஃப் கொடுத்த பத்மராஜன் தமிழக தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார். அதேபோல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராகவும் பத்மராஜம் களமாடி உள்ளார்.