ஹைதராபாத் (தெலங்கானா): தெலங்கானா மாநிலத்தில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (டிச. 3) வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது.
இதில், ஆளும் பிஆர்எஸ் கட்சியை விடக் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்படும் அனுமுலா ரேவந்த் ரெட்டியை தேர்தல் நடத்தை விதிகளை மீறி சந்தித்ததாக தெலங்கானா காவல் துறைத் தலைவரை பணியிடை நீக்கம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் தெலங்கானா காவல் துறைத் தலைவர் அஞ்சனி குமார், தெலங்கானா காவல்துறை நோடல் அதிகாரி சஞ்சய் ஜெயின் மற்றும் மகேஷ் பகவத் ஆகியோர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராக கருதப்படும் அனுமுலா ரேவந்த் ரெட்டியை பூ கொத்துடன் சந்தித்ததாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெலங்கானா காவல் துறைத் தலைவர் (DGP) அஞ்சனி குமாரை இந்தியத் தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் தெலங்கானா காவல்துறை நோடல் அதிகாரி சஞ்சய் ஜெயின் மற்றும் மகேஷ் பகவத் ஆகியோரிடம் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..! யார் இந்த வெங்கட ரமண ரெட்டி!