சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் விலை போவதைத் தவிர்க்கக் காங்கிரஸ் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் மூன்று குழுக்களிடையே போட்டி நிலவுவதாக கூறப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் குழு இமாச்சல பிரதேசத்திற்கு விரைந்து உள்ளது. அங்கு சென்ற காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் குழு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லெக்கரை சந்தித்தனர்.
தொடர்ந்து நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதலமைச்சரை தேர்வு செய்யும் முழு அதிகாரத்தை மாநிலத் தலைவர் பிரதீபா சிங்கிற்கு வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, இமாச்சல பிரதேசத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்குடன் தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இமாச்சல பிரதேச முதலமைச்சர் விர்பாதிரா சிங்கின் மனைவியுமான பிரதீபா சிங்கும் முதலமைச்சர் பந்தயத்தில் தொடர்கிறார். பிரதீபா சிங்கின் மகன் எம்.எல்.ஏ, விக்ரமாதித்யா சிங்கும் முதலமைச்சர் பந்தயத்திலிருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
அதேநேரம் இமாச்சல பிரதேச முதலமைச்சராக பிரதீபா சிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற யூகம் காங்கிரஸ் தொண்டர்களிடையே கிளம்பி உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் முதலமைச்சர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இமாச்சல பிரதேசத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, அதிதீவிரத்தன்மை கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும், எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழிவு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் இறுதி கட்ட முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்
இதையும் படிங்க:எடுக்காத படத்துக்கு போஸ்டர் - விண்டேஜ் நடிகையிடம் ரூ.1.22 லட்சம் மோசடி...