கொப்பள் (கர்நாடகா):'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு மாடல்ல மற்றை யவை' என்ற குறளின் மூலம் கல்வி என்பது அழிவில்லாத செல்வம் என்பதை அன்றே கணித்தார் திருவள்ளுவர். கல்வி, சமூகத்தின் உயிராகவும், உறுதியாகவும் இருந்து வருகிறது. அனுபவங்களால் மட்டுமே கல்வியின் ஆழம் மற்றும் அர்த்தத்தை உணர முடியும் என்று பிதற்றிக்கொள்பவர்கள் மத்தியில், கல்வி அனுபவம் இல்லாத மூதாட்டி ஒருவர் பிறர் கல்விக்காக உதவிக்கரம் நீட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூதாட்டி அவர் தவறவிட்ட வாய்ப்பை, பிற குழந்தைகள் தவறவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தன் வாழ்வின் ஒரே ஆதரமாக இருந்த நிலத்தை அரசு கல்விக்கூடத்திற்காக கொடுத்து உதவியுள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் உள்ள குனிகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹச்சம்மா சௌத்ரி. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கனவர் பஸ்சப்பா சௌத்ரியுடன் குனிகெரே கிராமத்தில் அவர்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தனர்.
தொடர்ந்து ஹச்சம்மாவின் கனவரான பஸ்சப்பா சௌத்ரியின் இறப்பிற்குப் பின்னர், குழந்தைகள், ஆதரவாளர்கள் என யாருமில்லாத ஹச்சம்மா தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பிழைப்பிற்காக இருந்த தனது 2 ஏக்கர் நிலத்தில் தனி ஒரு ஆளாக விவசாயம் செய்து வந்தார். இந்த வேளையில் தான், அப்பகுதியில் கல்விக்கூடம் அமைப்பதற்காக நிலம் தேடியுள்ளது அம்மாநில அரசு. இதனை அறிந்த மூதாட்டி ஹச்சம்மா தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை இலவசமாக அப்பகுதி குழந்தைகளுக்காக வழங்க முன்வந்தார்.
ஹச்சம்மாவின் நிலத்தில் கல்விக்கூடம் கட்டப்பட்டு அதில் மாணவர்களும் கணிசமாக வருகை தந்தனர். பல கோடி மதிப்புப்போகும் நிலத்தை மாணவர்களின் கல்விக்காக இலவசமாக கொடுத்து உதவியது கல்வி மீது ஹச்சம்மாவின் மரியாதையை உணர்த்துகிறது. இதைத்தொடர்ந்து, கல்விக்கூடத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் குறையாக இருந்த நிலையில், தன்னிடம் இருந்த மீதி ஒரு ஏக்கர் நிலத்தையும் அப்பகுதியின் பள்ளிக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார். மேலும் இவர் பிழைப்பிற்காக அவர் சொந்த நிலத்தில் இயங்கிவரும் பள்ளியிலே மதிய உணவு சமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
குனிகெரேவில் இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்த வந்த நிலையில், இந்த நிலத்தின் மூலம் நல்ல லாபம் பார்த்திருக்கலாமே என்ற கேள்விக்கு, "இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எல்லாம் என் குழந்தைகள் போல பார்த்து வருகிறேன். இந்த மனமகிழ்ச்சியை எனக்கு அந்த நிறுவனங்கள் கொடுத்திருக்காது" என்று தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக பொறுப்பை உணர்ந்த ஹச்சம்மாவின் உதவியை கௌரவிக்கும் வகையில், அம்மாநில அரசின் உயரிய விருதாக கருதப்படும் 'கர்நாடக ராஜ்யோத்சவா விருதை' கர்நாடகா தினமான நவம்பர் 1ஆம் தேதி வழங்கி பெருமை சேர்த்தது. கர்நாடகா தினமாக கருதப்படும் நவம்பர் 1ஆம் தேதி அம்மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவின் கீழ் ஆண்டுதோறும் கர்நாடக ராஜ்யோத்சவா விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், விளையாட்டில் சாதனை படைத்த அதீதி அசோக் மற்றும் டி.எஸ்.திவ்யா மற்றும் 68 பேர் இந்த விருதிற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பட்டியலில் சமூக சேவை பிரிவில் இடம்பெற்றார் ஹச்சம்மா.
இதையும் படிங்க:என்னை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய படம் இதுதான்; ரெய்டு படம் குறித்து மனந்திறந்த நடிகர் விக்ரம் பிரபு!