டெல்லி:இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021ஆண்டு தகவல் தொடர்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு ஆக.16ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.
இந்த யூடியூப் சேனல்களில், இந்தியாவில் மத நல்லிணக்கத்துக்கு மாறாக வெறுப்பை தூண்டும் வகையில் உரிமைகள் தொடர்பான தவறான தகவல்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. குறிப்பாக, மதம் குறித்த கட்டமைப்புகளை தகர்த்தெறிய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், மதப்பண்டிகைகளைக் கொண்டாட மத்திய அரசு தடை விதித்து, மதப்போரை அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த செய்திகள் நாட்டில் மதக்கலவரத்தை தூண்டி, பொதுஒழுங்கை சீர்குலைக்க கூடியவையாகும். அதோடு இந்த சேனல்கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய்யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நட்புறவு தொடர்பான இந்த தகவல்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளன.
இவை அனைத்தும் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, நாட்டின் பொதுஅமைதி ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த யூடியூப் சேனல்கள், போலியான மற்றும் பரபரப்பான சிறுபடங்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களின் படங்கள், சில செய்தி தொலைக்காட்சிகளின் லோகோக்களை பயன்படுத்தி, பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.