டெல்லி : உளவு புகாரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் முன்னாள் கமான்டர் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்திய போர்க் கப்பல்களில் கமாண்டராக பணியாற்றிய பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள், அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில், கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் 8 பேரையும் கத்தார் பாதுகாப்பு படை கைது செய்தது. ஜாமீன் கேட்டு பலமுறை மனுத் தாக்கல் செய்த போதும், அதை நிராகரித்த கத்தார் நீதிமன்றம் 8 பேரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கடற்படை கமாண்டர் பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்களுக்கு மரண தண்டனை விதித்தது அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரித்து உள்ளது.
8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிட்டது குறித்த ஆரம்பகட்ட தகவல் கிடைத்து இருப்பதாகவும், மரண தண்டனை குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் விரிவான நீதிமன்ற உத்தரவு நகலுக்காக காத்திருப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கத்தார் சிறையில் சிக்கிக் கொண்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைளை மேற்கொள்ள கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :England Vs Sri Lanka : இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்!