திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடந்த ஜூலை 5ஆம் தேதி சுங்கத் துறை பறிமுதல்செய்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் ஃபரீத், மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கர் உள்ளிட்டோர் பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் சி.எம்.ரவீந்திரனுக்கும் இந்தக் குற்றத்தில் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனடிப்படையில், சி.எம். ரவீந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர முகமை முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு, நுரையீரல் சுவாசக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டுமுறை விசாரணை ஆணையத்தின் முன் முன்னிலையாக முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, வீட்டிற்குத் திரும்பியுள்ள சி.எம். ரவீந்திரனை, கொச்சியில் உள்ள அலுவலகத்தில் டிசம்பர் 10ஆம் தேதியன்று முன்னிலையாகுமாறு அமலாக்கத் துறை மூன்றாவது முறையாக அழைப்பாணையை அனுப்பியுள்ளது.