ஹைதராபாத்:டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு மதுபானக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சுமார் 800 தனியார் நிறுவனங்கள் மதுபானங்களை விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருத்தப்பட்ட மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக டெல்லி மாநில அரசு அறிவித்தது.
இந்த முறைகேட்டில் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார். அதன்படி, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் மணீஷ் சிசோடியா கைதான நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி தலைவர்களை பழிவாங்குவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவும் சிக்கியுள்ளார். சவுத் குரூப் என்ற நிறுவனம், மதுபானக் கொள்கை மூலம் பயன்பெறும் விதமாக, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்குதாரராக கவிதா இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 11ம் தேதி, கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 16) அவர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.