டெல்லி: பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரத்தை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 27) மீண்டும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
இந்த வழக்கில், தன்னை கைது செய்து உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முடிவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ள மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று, 2002ஆம் ஆண்டு வெளியான விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் போலீஸ் காவலுக்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் கருதினால், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் என்று உச்ச நீதிமன்றம் கூற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்து உள்ளார்.
புலனாய்வு அமைப்புக்கு கிடைக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள், காவல் துறையினரின் அதிகாரங்களை தொடர்ந்து அனுபவித்தால் கடுமையான சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கபில் சிபல் குறிப்பிட்டு உள்ளார்.
சுங்கச் சட்டம் மற்றும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) ஆகியவற்றின் விதிகளைப் பற்றி குறிப்பிட்ட கபில் சிபல், இந்த இரண்டு சட்டங்களின் கீழ் ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்று வாதிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை, மாநில காவலில் வைத்து விசாரணை நடத்துகிறதே தவிர, சுங்க அதிகாரிகள் அல்ல. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று கபில் சிபல் தெரிவித்து உள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் முன்னறிவிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று கபில் சிபல் குறிப்பிட்டு உள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டம் இயற்றும் நோக்கம் தெளிவாக உள்ளது மற்றும் ஒரு காவல் துறை அதிகாரியின் குறிப்பிட்ட அதிகாரங்கள், சில சிறப்புச் சட்டங்களின் கீழ் மற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் துறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் PMLA சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார். அரசியல் அறிக்கைகளை வெளியிடாமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நம்மை கட்டுப்படுத்திக்கொள்வோம் என்று கூறினார்.