மும்பை:ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். கனரா வங்கியில் வாங்கிய கடன் தொகையை துணை நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ பரிந்துரையின் பேரில் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் அவரின் மனைவி அனிதா நரேஷ் கோயல் உள்ளிட்ட பலர் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இன்று அவரை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்திய விமானப் போக்குவரத்துத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கியது ஜெட் ஏர்வேஸ். இந்த நிறுவனம் கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு விமான போக்குவரத்துத் துறையில் முக்கிய இடத்தை தக்கவைத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த சில வருடங்களில் ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த நிதி அதிகமாகத் தேவைப்பட்ட நிலையில் வங்கிகளில் கடன் பெற அந்நிறுவனம் முனைப்புக் காட்டியது. ஆனால் வங்கிகள் கடன்தர மறுத்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது. அது மட்டும் இன்றி அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 119 விமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீர்ப்பாயம் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கனரா வங்கியில் இருந்து 848.86 கோடி ரூபாய்க் கடன் பெற்றுள்ளார். அதில் 538.62 கோடி ரூபாய்க் கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்த நிலையில் வங்கி சிபிஐ-யில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கனரா வங்கியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்காக கடன் பெற்றுவிட்டு அந்த தொகையை அவரின் ஜெட்லைட் நிறுவனத்திற்குப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு தற்போது அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணையில் அந்த நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கில் அவரின் மனைவி அனிதா நரேஷ் கோயல் மற்றும் ஊழியர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் கோயல் இன்று மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இவர் மீதான அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கை விமான போக்குவரத்து மற்றும் நிதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க:சிங்கப்பூரின் அதிபரான தமிழர்... ஆளப்போறார் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்!