தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2021, 9:30 AM IST

Updated : Apr 10, 2021, 9:47 AM IST

ETV Bharat / bharat

அனைத்துக் கட்சிகளும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற தேர்தல் ஆணையம் அறிவுரை

டெல்லி: கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், கட்சிக் கூட்டங்களுக்குத் தடைவிதிக்கத் தயங்க மாட்டோம் என அனைத்து தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

EC
தேர்தல் ஆணையம்

நாட்டில் கரோனா பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. குறிப்பாக, குடியிருப்புகள், விடுதிகள், பணியிடங்களில் அதிகளவில் கரோனா பாதிப்பு பதிவாவதைக் காண முடிகிறது.

கரோனா பரவலைத் தடுத்திட மத்திய அரசும், மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மக்கள் முகக்கவசம் அணிவதும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியம் எனச் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம், அபராதம் வசூலிக்கப்பட்டுவருகிறது. ஆனால், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலோ அல்லது பேரணியிலோ, பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருக்கின்றனர்.

இவ்விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்துவந்த தேர்தல் ஆணையம், அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், "கரோனா விதிமுறைகளை அரசியல் கட்சித் தலைவர்கள், பரப்புரையின்போது கடைப்பிடிப்பது அவசியம். தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து, முகக்கவசம் அணிய அவர்களை வலியுறுத்த வேண்டும்.

அவ்வப்போது கிருமிநாசினி உபயோகிக்கக் கையைச் சுத்தம்செய்திட அறிவுறுத்த வேண்டும். கூட்டமாக நிற்கும் தொண்டர்களை, தள்ளி நீக்குமாறு கூற வேண்டும். விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தால், உங்கள் கட்சிக் கூட்டங்களுக்குத் தடைவிதிக்கவும் தயங்க மாட்டோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்ரல் 10) நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதையடுத்து, ஏப்ரல் 17இல் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 22இல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26இல் ஏழாம் கட்ட வாக்குப்பதிவும், இறுதியாக ஏப்ரல் 29ஆம் தேதி எட்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் 4-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

Last Updated : Apr 10, 2021, 9:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details