டெல்லி:மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை 2022-23 நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி 1ஆம் தேதியன்றுதாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்றுமுதல் (பிப்ரவரி 2) குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
அதில் பங்கேற்ற, காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தும் குற்றஞ்சாட்டியும் பேசியிருந்தார். அவர் தனது உரையில், நரேந்திர மோடி அரசு பாகிஸ்தானையும் சீனாவையும் இணைத்து இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய குற்றத்தைச் செய்துள்ளது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வெளியுறவுக் கொள்கையில் யுக்திசார்ந்த இலக்கு
இதற்கு உரிய பதிலை இன்று (பிப்ரவரி 3) அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். தனது பதிலில், "1963ஆம் ஆண்டு பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சீனாவிடம் ஒப்படைத்தது.
1970இல் சீனா கரக்கோரம் நெடுஞ்சாலையை பாகிஸ்தான் வழியாக அமைத்தது. 1970ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளும் (பாகிஸ்தான் - சீனா) நெருங்கிய அணுசக்தி ஒத்துழைப்பைக் கொண்டிருந்தன. 2013இல் சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை தொடங்கப்பட்டது.
- அதனால் உங்களை (ராகுல் காந்தி) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: 'அப்போது சீனாவும் பாகிஸ்தானும் தொலைவில் இருந்தனவா என்று?'
சீனர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். பாகிஸ்தானையும் சீனாவையும் பிரித்துவைத்திருப்பதில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய யுக்திசார்ந்த இலக்கைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் அடிப்படையாகும். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களை ஒருங்கிணைத்தீர்கள்!" என்றார் புள்ளிவிவரங்களுடன்.