நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் ஆய்வு (பே ஜல் சர்வேக்ஷன்) மாதிரித் திட்டத்தை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர், துர்கா ஷங்கர் மிஸ்ரா தொடங்கி வைத்தார். நகரங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவை மதிப்பிடவும், கழிவுநீர் மறுசுழற்சி, நீர்நிலைகளை வரைபடமிடுதல் போன்றவற்றிற்காகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
“முதற்கட்டமாக மதுரை, ஆக்ரா, பத்லாபூர், புவனேஷ்வர், சுரு, கொச்சி, பாட்டியாலா, ரோட்டக், சூரத், தும்கூர் ஆகிய 10 நகரங்களில் குடிநீர் ஆய்வு மாதிரித் திட்டத்தை மேற்கொள்ள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முடிவு அடிப்படையில் அனைத்து அம்ருத் நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றும் மிஸ்ரா மேலும் கூறினார்.
குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, தண்ணீர் இழப்பு, நகரில் உள்ள 3 நீர்நிலைகளின் நிலை போன்ற தரவுகள், குடிமக்கள், நகராட்சி அதிகாரிகளிடமிருந்து நேரடியாகவும், அனுமதி வழங்கப்பட்ட கேள்வி பதில், சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரியின் பரிசோதனை, தண்ணீர் இழப்பு குறித்த கள ஆய்வு போன்றவற்றின் வாயிலாகவும் பெறப்படும்.