பாமகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் மட்டும் அவரவர் வீடுகளிலிருந்து காணொளி வாயிலாக பங்கேற்க, கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, தான் தொடுத்த வழக்கு மூலமாகத்தான் வன்னியர் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக கூறுகிறாரே என செய்தியாளர் ஒருவர் ராமதாசிடம் கேட்டார். அதற்கு ராமதாஸ் தனக்கே உரிய பாணியில், ”ஏதோவொரு நாயை பற்றியும், அது கூறுவதை பற்றியும் இங்கு வந்து பேசுகிறாயே...உனக்கு வெட்கமாயில்லை. இந்த தேர்தல் முடியட்டும், அப்புறம் பாரு...” என்றார். ராமதாசின் இந்த பேச்சு பல்வேறு சமூகதளங்களிலும் பரவி வரும் அதே வேளையில், அவருக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.