உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 'சார்தாம் யாத்திரை' மிகவும் பிரபலமானது. இந்த யாத்திரையில், உத்தரகாண்டில் உள்ள நான்கு புனிதத்தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்துக்கு யாத்திரை செல்வார்கள். இந்த யாத்திரை உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரியில் தொடங்கி பத்ரிநாத் கோயிலில் நிறைவடைகிறது. இந்த யாத்திரை செல்லும் வழியில், ரிஷிகேஷ், ஹரித்வார் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கும் யாத்ரீகர்கள் செல்வார்கள்.
இந்த யாத்திரையை இந்துக்கள் மிகவும் முக்கியமாக கருதுகின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை கால்நடையாகவும், குதிரையிலும் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு சார்தாம் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், சுமார் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று(ஏப்.25) கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.20 மணிக்கு, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கேதர்நாத் கோயிலில் தரிசனம் செய்தனர்.
உத்தரகாண்ட்டில் கனமழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டதால், சார்தாம் யாத்திரைக்கான முன்பதிவு வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. யாத்ரீகர்களும் சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று தெளிவான வானிலை நிலவியதால் யாத்ரீகர்கள் கேதர்நாத் கோயிலில் தரினசம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீநகர் கர்வால் மற்றும் ரிஷிகேஷில் நிறுத்தி வைக்கப்பட்ட யாத்ரீகர்களும் கேதார்நாத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.