போபால் (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி 230 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணியானது நேற்று (டிசம்பர். 3) நடைபெற்றது. இதில், 163 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் 66 தொகுதியிலும் பாரத் ஆதிவாசி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், பாரத் ஆதிவாசி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சைலானா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் (வயது 33) போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்ப்பில் மூத்த தலைவர் ஹர்ஷ் விஜய் கெலாட் மற்றும் பாஜக சார்பாக சங்கீதா சரேல் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று (டிசம்பர் 3) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் 71,219 வாக்குகள் பெற்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹர்ஷ் விஜய் கெலாட் 66,601 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து கமலேஷ்வர் தோடியார் 4,648 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பாஜக மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.