ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் வசிக்கும் வயது மூத்த பெண், பத்தேரி தேவி. இவர் வீட்டு வேலையில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பத்தேரி தேவியை அவரது உறவினர்கள் பான்சி லால் சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு பத்தேரி தேவி ஒப்புதல் அளிக்கவே, கடந்த வாரம் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் கவனக்குறைவாகக் காயம் ஏற்பட்ட வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்த பத்தேரி தேவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவசர அவசரமாக அவரது இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் பத்தேரி தேவி குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்தேரி தேவி குடும்பத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிவானி மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் சப்னா கெஹ்லாவத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மருத்துவர் மீது குற்றம் நிரூபணம் ஆகும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், சிகிச்சை அளிக்கப்பட்ட வயது மூத்த பெண்ணுக்கு இரு கால்களிலும் காயம் இருந்ததாகவே மருத்துவர் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:65 லட்சம் பேருக்கு தடுப்பூசி; 97% பேருக்கு முழு திருப்தி-மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்