தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை.. உணர்வுகளை புண்படுத்தினால் வருந்துகிறேன்" - நாடாளுமன்றத்தில் செந்தில் குமார் எம்.பி மன்னிப்பு! - திமுக எம்பி செந்தில் குமார்

பாஜக தேர்தல் வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதற்கு வருந்துவதாகவும், கவனக்குறைவால் அப்படி ஓரு சூழல் நிகழ்ந்ததாகவும் கூறி திமுக எம்.பி. செந்தில் குமார் மக்களவையில் மன்னிப்பு கோரினார்.

Senthil kumar
Senthil kumar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 6:00 PM IST

டெல்லி :நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த டிம்பர் 4ஆம் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (டிச. 5) இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், இந்தி பேசும் மாநிலங்களை பொதுவாக கோ மூத்திர மாநிலங்கள் (கௌமுத்ரா) என்று அழைப்பதாகவும், அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா கேரளா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

திமுக எம்.பி. செந்தில் குமார் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. செந்தில் குமார் எம்.பி.யின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பிக்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்கு கருத்து வெளியிட்டதற்கு செந்தில் குமார் எம்.பி. மன்னிப்பு கோரினார்.

தனது எக்ஸ் பக்கத்தில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்றும் அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று (டிச. 6) மூன்றாவது நாள் நாடாளுமன்றக் கூட்டம் கூடிய நிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தில் பாஜக உறுப்பினர்கள் செந்தில் குமார் எம்.பி. மன்னிப்பு கோர வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அவை மேற்கொண்டு இயங்க முடியாமல் முடங்கியது. இதனால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடிய நிலையில் பூஜ்ஜிய நேர விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், திமுக எம்.பி. செந்தில் குமார் வெளியிட்ட கருத்துக்கு நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர் பாலு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடன்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர் பாலு எம்.பி., செந்தில் குமார் எம்.பி கூறிய கருத்து சரியானது அல்ல என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் செந்தில் குமார் எம்.பியை கண்டித்ததாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய சேத விளைவுகள் குறித்து பேசிய டி.ஆர். பாலு, மத்திய அரை அதை தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, அவையில் பேசிய செந்தில் குமார் எம்.பி. கோ முத்திரா கருத்து கவனக் குறைவால் ஏற்பட பிழை என்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துவதாகவும், வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க :"வெளிப்படையாக மன்னிப்பு கோருகிறேன்" - தர்மபுரி எம்.பி செந்தில்குமார்

ABOUT THE AUTHOR

...view details