DMK MP Dayanadhi Maran citicize BJP on Manipur and delhi ordinance biill issue டெல்லி : பாஜக அரசு தங்கள் கூட்டணிகளான சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகவும், 2024ஆம் ஆண்டு நாங்கள் ஆளும் கட்சி வரிசையில் அமரும் போது பாஜக எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்து இருக்கும் என்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.
டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்து அதிகாரம் அளிக்கும் அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி சேவைகள் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக எம்.பி தயாநிதி மாறன் அதை கடுமையாக எதிர்த்தார்.
டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்த அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்த போதும் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்து உள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி சேவைகள் மசோதாவுக்கு திமுக ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று தயாநிதி மாறன் கூறினார். கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இல்லாததாலும், ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியதையும், பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் விரக்தியின் வயிற்றேரிச்சல் காரணமாக டெல்லியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்து விட்டது என்று கூறினார். உலகமே ஒரு குடும்பம் என்று கூறும் பிரதமர் மோடி தனது குடும்பத்தின் ஒரு பகுதியான மணிப்பூர் பற்றி எரியும் போது அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார் என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதானி விவகாரம் குறித்து பேசும் போதும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்றும் இப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும் போதும் அவைக்கு வர மறுப்பதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
மத்திய அரசு அதன் கூட்டணிகளா சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகவும், மகாராஷ்டிராவில் ஊழல்வாதிகள் என அமலாக்கத்துறை விசாரணை நடத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பாஜக கூட்டணிக்கு வந்தவுடன் எப்படி நல்லவர்கள் ஆனர்கள் என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி மிகவும் வலுவாகவே இருப்பதாகவும், 2024ஆம் ஆண்டு, நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து இருப்பீர்கள், ஆனால், நாங்களோ ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து இருப்போம் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் என்றும் மாநில அரசுகளுக்கு ஆளுநர் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தயாநிதி மாறன் பேச்சுக்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தயாநிதி மாறன் பேசிக் கொண்டிருக்கும் போது துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் நேரம் முடிந்து விட்டது என்றும் இருக்கையில் உட்காருமாறும் தெரிவித்தார். மேற்கொண்டு தயாநிதி மாறன் பேச அனுமதி மறுத்த நிலையில், திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க :மணிப்பூரில் மீண்டும் கலவரம்... 20 பேர் படுகாயம்.. இம்பாலில் மீண்டும் ஊரடங்கு அமல்!